ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மூலஸ்தானத்தின் முன்பாக சத்தம் போட்டதோடு பணியாளர்களை அடித்ததாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தர்களும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. மூலஸ்தானத்தின் முன்பிருந்து உடனடியாக நகராமல் நின்றதாகவும் தெரிகிறது. உடனடியாக அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது இரு பிரிவினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது கோவில் பணியாளர்களும், பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதன் காரணமாக தாக்கப்பட்ட கோவில் காவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்துள்ளார். இதனிடையே ரங்கநாதர் கோவிலில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தை 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோவில் பணியாளைரையும் தாக்கி உள்ளனர். மற்ற பக்தர்களையும் தரிசனம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.