நிரந்தரமாக காசாவில் இருக்கும் எண்ணமில்லை: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்!

காசாவிலேயே நிரந்தரமாக இருந்துவிடும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மாறாக காசா பகுதியை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்ற ஆலோசனையில் ஈடுபட இஸ்ரேல் தயாராக இருக்கிறது. காசாவில் அதிகாரம் செலுத்தப்போவது இஸ்ரேலுக்கு விரோதமான குழுவாக இல்லாமல் இருப்பது மட்டும் அவசியம் என்றார்.

நிரந்தரத் தீர்வுக்காக ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லாக்களுடன் கூட ஆலோசனை நடத்த இஸ்ரேல் தயாராகவே இருக்கிறது ஆனால் எல்லை பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் கூறினார். ஹமாஸை அழிக்க இஸ்ரேல் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கவும் தயார். ஆனால் அதற்காக நிரந்தரமாக காசாவிலேயே இருந்துவிடும் எண்ணம் இல்லை. ஹமாஸ் குழுவினர் தாமாக முன்வந்து சரணடையலாம். அவ்வாறு சரணடைந்தால் அவர்கள் உயிராவது மிஞ்சும். இல்லாவிட்டால் அவர்களின் விதி எங்கள் கைகளில் என்றார். காசாவில் இதுவரை 500க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.