டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் அத்துமீறி நுழைந்து ‛ஸ்பிரே’ அடித்து தாக்குதல் நடத்திய 2 பேர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஸ்பிரே அடித்து கோஷமிட்ட 2 பேர் என மொத்தம் ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் 5 பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இப்படி நாடாளுமன்ற மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் 22ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் 2001 டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வழக்கம்போல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் மஞ்சள்நிற ஸ்பிரே அடித்தனர். அதோடு ஒருவர் லோக்சபா அரங்குக்குள் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி ஓடினார். இதனால் எம்பிக்கள் பயந்துபோயினர். அவர்கள் பாதுகாப்பு கருதி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பிற எம்பிக்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் ஒரு பெண், ஒரு ஆண் ஸ்பிரே அடித்து கோஷமிட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்திய பெண் உள்பட 4 பேர் குறித்த சில முக்கிய விஷயங்களை போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி நாடாளுமன்றத்தில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்த நபர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பது தெரியவந்துள்ளது. இதில் மனோ ரஞ்சன் மைசூரை சேர்ந்தவர். இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்துள்ளார். இவர்கள் கர்நாடகாவின் மைசூர் -குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பெயரில் விசிட்டர் பாஸ் பெற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தது தெரியவந்துள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஸ்பிரே அடித்து கோஷமிட்டதாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் நீலம் (42), அமோல் ஷிண்டே (25) என போலீசார் தெரிவித்துள்ளார். இதில் நீலம் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர். இவர் சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.