அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையில் 18-ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை ஜெயலலிதா நடத்தி வந்துள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டும் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் அ.தி.மு.க. மாநில-மாவட்ட நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பெஞ்சமின், சி.த.செல்லப்பாண்டியன், கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் டி.ஜான் மகேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.