மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டப்படி, அறங்காவலர்கள் கடந்த நவம்பர் 6-ந்தேதி நியமனம் செய்யப்பட்டனர். அதில், கோவில் அறங்காவலர்களாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா அன்புநிதி ஆகிய 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த 5 அறங்காவலர்கள் நியமனமும், அரசியல் பின்புலம் கொண்டே நடைபெற்றுள்ளது. இந்த நியமனம், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த 5 பேரையும் அறங்காவலர்களாக நியமனம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அறங்காவலர் நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட்டு உள்ளது. 5 பேரில் 3 பேர் பெண்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை” என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், அறங்காவலர் நியமனத்தில் என்ன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், “பொதுநல வழக்கு என்றால் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வழக்காக இருக்க வேண்டும். இந்த வழக்கை மனுதாரர் எந்த அடிப்படையில் தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரமே இல்லாமல் அரசு நியமனம் செய்த பதவியை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அறங்காவலர் நியமனம் குறித்து ஐகோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை உத்தரவாக பிறப்பித்துள்ளது. அதனையும் மனுதாரர் கவனத்தில் கொள்ளவில்லை. மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக அரசுத்தரப்பு, அறிக்கையாக கொடுத்துள்ளது. அரசின் அறங்காவலர் நியமனம் கோர்ட்டுக்கு முழு திருப்தியை தந்துள்ளது. 3 பெண் அறங்காவலர்களை நியமிருந்திருப்பது கூடுதல் திருப்தியை அளித்துள்ளது. அரசின் நியமனத்தில் சந்தேகம் கொள்ளவோ, குறை கூறவோ எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.