சபரிமலையில் கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: எல்.முருகன்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை இருப்பதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக புகழ் பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் தொடங்கியதில் இருந்தே அதிகஅளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்து விடுவதாக தெரிகிறது. இதனால் பக்தர்கள் 12 மணிநேரம் முதல் 20 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீண்டநேரம் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களில் பலர் வரிசையில் காத்திருக்க முடியாமல் மயக்கமடைந்த தகவல்கள் வருகின்றன. நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்கின்றனர். நெரிசலில் குழந்தைகள் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

சபரிமலையில் இதுவரை இல்லாத அளவு கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. நிலக்கல், எரிமேலி, பம்பை என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு வரும் அரசு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 200 பக்தர்கள் ஏற்றப்பட்டு திக்கு முக்காடி போகும் நிலை காணப்படுகிறது. பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யவும் உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, காவல்துறையினருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனினும் நிலைமை சீரடைந்ததாக தெரியவில்லை. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் போதிய ஏற்பாடுகள் இல்லாமல் பக்தர்கள் அவதியுறும் நிலை தொடர்கிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமலேயே ஊர் திரும்பும் வருத்தமான செய்திகளும் வருகின்றன. சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக பல நாட்கள் மாலையணிந்து, விரதமிருந்து சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்புவது அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களை மட்டுமல்ல ஆன்மீக நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த செய்தியை கேட்டு பெரும் வருத்தம் கொள்கின்றனர்.

எனவே இந்த சூழ்நிலையை சரி செய்ய கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் வரும் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. எனவே நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். அதிகமான பக்தர்கள் வந்ததால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்ற கேரள அரசின் வாதம் ஏற்கதக்கதாக இல்லை. ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை முறைப்படுத்தி அவர்கள் எந்த இடையூறும் இன்றி தரிசனம் செய்ய ஏதுவான சூழலை உருவாக்க வேண்டியது திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசின் கடமையாகும். அதுபோலவே வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறையில் ஏற்படும் குளறுபடிகளும் பக்தர்கள் கூட்டம் அலைமோத காரணமாகி விடுகிறது. எனவே இதனையும் கேரள அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும். சபரிமலைக்கு வரும் வாகனங்களையும் முறைப்படுத்தி அவற்றை நிறுத்த உரிய பார்க்கிங் வசதியையும் செய்து தர வேண்டும்.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் மயக்கமடைந்து விடுகின்றனர். எனவே முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. கூடுதலாக வரிசைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27 ம் தேதி நடக்கிறது. மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த காலத்தில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். எனவே இப்போதே அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை கேரள அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் இதுவரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை முடியும்போது தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 40 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப கேரள அரசு முன்னேற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.