மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. இந்த புயல், வெள்ளம் காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்க ரூ. 450 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது போக சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் கால்வாய்களை 550 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் கோடி ரூபாயை குறைந்தபட்சம் கேட்ட நிலையில், அதிகபட்சம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில் மத்திய அரசு வெறும் 450 கோடி ரூபாய் கொடுத்தது சர்ச்சையானது. இந்த நிலையில்தான் மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில், “மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்? நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்” என்று பதில் அளித்திருந்தார்.
இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக ஆதரவலர்கள் பலர் இணையத்தில் இதை விமர்சனம் செய்து இருந்தனர். தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார் என்றார்.
கடந்த முறை அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த முறை வித்தியாசமான முறையில் மீண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார். அதில், “நான் மரியாதையை கம்மியா யாரையும் பேசலை. அது என் நோக்கமும் இல்லை. நான் வேண்டுமானால் வேறு மாதிரி.. வேறு வார்த்தையில் சொல்லட்டுமா? மாண்புமிகு ஆளுநருடைய அப்பாவுடைய காசை நாங்கள் கேட்கவில்லை. மாண்புமிகு ஒன்றிய அமைச்சரின் அப்பாவுடைய காசை யாரும் கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தைதான் கேட்கிறோம். தமிழ்நாடு மக்கள் பாதித்து உள்ளார். அதனால் தமிழ்நாடு மக்கள் கட்டிய வரிப்பணத்தைதான் கேட்கிறோம்”என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.