நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தினர்: பிரேமலதா!

“விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை – திருவேற்காட்டில் டிச.14-ஆம் தேதி தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

விஜயகாந்த் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் என அனைவரும் பக்கபலமாக இருக்கின்றனர். அவர் நடிகராக இருந்தவரை வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினோம். அப்போது விஜயகாந்த் எல்லாருக்கும் பொதுவானவராகவும், எல்லோராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். எப்போது விஜயகாந்த் கட்சிக்கு வந்தாரோ, அத்தனை பேரும் அவருக்கு எதிராளியாக மாறுகின்ற ஒரு சூழல் வந்தது. விஜயகாந்த் அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து எதிர்நீச்சல் போட்டே திரையுலகிலும், அரசியலிலும் முன்னேறினார். அதற்கான வெற்றியை மக்களும் கொடுத்தனர். விஜயகாந்த் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்.

அரசியல் என்பதே சவால் தான். அரசியலில் பெண்கள் இருப்பது பெரிய சவால் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதாதான். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
விஜயகாந்துக்கு எப்போதும் எம்ஜிஆர்தான் குரு, ரோல் மாடல். ஒரு பெண் தலைவராக ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல். அவருடைய கம்பீரம், தைரியம், முடிவெடுக்கும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்தும் இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். தற்போது பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2011 வரை தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து இயங்கி வந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் அவர் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரது முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என உறுதியாக இருந்தார். விஜயகாந்த் அறிவித்த பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள்.

எண்ணூர் முதல் பழவேற்காடு வரை எண்ணெய் படலங்கள் கலந்திருக்கிறது. லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து இருக்கின்றன. இதற்கெல்லாம் முறையான திட்டமிடாததே காரணம். மத்திய அரசும் மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். தயவுசெய்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு வழங்கும் ரூ.6000 நிவாரணத் தொகையை வைத்து மிக்சி, கிரைண்டர் கூட வாங்க முடியாது. இந்த 6000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சேருமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.