இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவி?: கூகுள் பணியாளர்கள் போராட்டம்!

கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)-ஐ ரத்து செய்யக் கோரி கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளைப் போரில் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை கொல்வதாகப் போராட்டக்காரகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் கூகுள் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘இனப் படுகொலைக்கு துணை நிற்காதே’, ‘இனப்படுகொலையால் லாபம் ஈட்டாதே’ என்பது போன்ற குறியீட்டுப் பலகைகளை ஏந்தி கோஷமெலுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் ராணுவத்திற்கு க்ளவுட் வசதிகளை (cloud services) அளிக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சக்திவாய்ந்த கணினி வளங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாததால் கூகுளின் தகவல்கள் மற்றும் கணினி வளங்களை க்ளவுட் வசதிகள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே இஸ்ரேல் ராணுவம் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தைப் போரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் கூகுளை இந்தத் திட்டத்திலிருந்து விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசும் போராட்டக்காரர்கள் இனப் படுகொலையாளர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இதற்கு பதிலளித்த கூகுள், இந்தத் திட்டத்தின் மூலம் இஸ்ரேலின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவை மட்டுமே பயன்பெறுகின்றன. போருக்கும் இந்த திட்டத்திற்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளது.