3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை!

ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பி வந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை செய்ததை அந்நாட்டு ராணுவம் ஒப்புக்கொண்டு உள்ளது.

பாலஸ்தீனின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ், அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து இஸ்ரேலை சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வந்தது. இந்த போரில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். காசாவின் அகதிகள் முகாம், மருத்துவமனை, பள்ளிகள் என அடைக்கலம் புகுந்தவர்கள், காயமடைந்தவர்கள், நோயாளிகளையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. இஸ்ரேலின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் காசா பகுதியே நிலைக்குலைந்து இருக்கிறது. ஆனால், ஹமாஸ் படையினர் பதுங்கி இருக்கும் சுரங்கங்களை கண்டுபிடிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. இந்த நிலையில் கத்தாரின் தலையீட்டால் கடந்த சில வாரங்களுக்கு முன் சில நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கைதிகள் இரு தரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து கைது செய்து அழைத்து செல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அவர்களிடம் தப்பித்து இஸ்ரேலுக்குள் செல்ல முயன்று உள்ளனர். அவர்களை இஸ்ரேல் ராணுவம் காப்பாற்றாமல் பயங்கரவாதிகள் என்று சந்தேகித்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்து இருக்கிறது. சுஜேயா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 3 பேரால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி அவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது. 25 வயதான சமீர் அல் தலால்கா, 26 வயதான அலோன் ஷம்ரிஜ், 28 வயதான யதோம் ஹைம் ஆகிய 3 பிணைக் கைதிகள்தான் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ள இஸ்ரேல் ராணுவம், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்து இருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி விளக்கம் அளித்து உள்ளார். அதில், “சமீர் அல் தலால்கா, அலோன் ஷம்ரிஜ், யதோம் ஹைம் ஆகிய 3 பேரை பயங்கரவாதிகள் என்றும், அவர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் நினைத்து ராணுவம் கொன்று விட்டது” என்று விளக்கம் கொடுத்து உள்ளார். இஸ்ரேலுக்கு ஹமாஸ் படை 250 பிணைக் கைதிகளை பிடித்துச் சென்ற நிலையில், இதுவரை 110 பேரை விடுவித்து இருக்கிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மட்டும் 18,700 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.