விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீனும் நீதிமன்றம் அளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் 2020-ல் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அம்பாசமுத்திரத்தில் பணி செய்து வந்தார். இவர் மீது நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண்மையில் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில்,விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது. இதன்படி, நேற்று காலை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் ஜோஸ், பல்வீர்சிங்கின் தனி பாதுகாவலர்கள் சதாம் உசேன், இசக்கிராஜா, கார் டிரைவர் விவேக் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 போலீசாரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினர். தொடர்ந்து பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேரும் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் முன்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து அந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இந்த வழக்கு விசாரணையை வெளிமாநிலத்துக்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என்றனர்.