எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடியதும், குவைத் மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கமான அலுவல்களுடன் சபையை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13 ஆம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவை காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் அளித்திருந்தார். இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, “13 ஆம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான யோசனைகள் கேட்கப்பட்டன. பலரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அளிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியவாரும் பதாகைகளை ஏந்தியவாறும் சபாநாயகரை நோக்கி வந்தனர். பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட வேண்டாம் என கைகூப்பி கேட்டுக்கொள்வதாக ஓம் பிர்லா தெரிவித்தார். மேலும், மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறும், தனிப்பட்ட அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் அமளியில் ஈடபட்டனர். இதையடுத்து, அவை மதியம் 2 மணி வரை ஒத்தவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியானது அல்ல எனக் கூறிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவை சமூகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவைத் தலைவரின் கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து முதலில் அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.