தென் தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த வளி மண்டல சுழற்சி நகராமல் தென்தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கே பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பயங்கர கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாகக் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 933 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்படி அங்கே பல இடங்களிலும் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்துள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வசிப்போருக்கு மின் கட்டணம் வந்திருந்தால் அவர்கள் தாமத கட்டணம் இல்லாமல் வரும் 20ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் அதீத மழை காரணமாக ஏற்கனவே பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் முடக்கப்பட்டுள்ளது. நீர் வடிந்த பிறகு, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிகிறது.