நாக்பூர் வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து; 9 பேர் பலி!

மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் செயல்பட்டுவரும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிவிபத்து நடந்த பகுதியில் சம்பவத்தின் போது 12 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த வெடிவிபத்து ஆலையின் காஸ்ட் பூஸ்டர் நிலையத்தில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து நாக்பூர் (ஊரக) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போட்டர் கூறுகையில், “வெடிமருந்து நிறுவனத்தின் காஸ்ட் பூஸ்டர் நிலையத்தில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

சோலார் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிட்., என்ற அந்த வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனம் நாட்டின் பாதுகாப்புதுறைக்கான வெடிமருந்துகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வந்தது.