திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் பல்வேறு அணிகள் இருந்த போதிலும், அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அக்கட்சியின் இளைஞரணி தான். இப்போதைய முதல்வர் ஸ்டாலினால் 1980-ம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு விவகாரங்களில் கழகத்துடன் இணைந்து பல்வேறு போராட்டங்களிலும், பேரணிகளிலும் திமுக இளைஞரணி பங்கேற்று இருக்கிறது. இதன் முதல் மாநாடு 2007-ம் ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கையில் திமுக இளைஞரணி ஒப்படைக்கப்பட்டது. அதன் செயலாளராக உதயநிதிக்கு பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு டிசம்பர் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் சேலத்தில் நடந்து வந்த நிலையில், மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டது. இதன் காரணமாக இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. வரும் 24-ம் தேதி இந்த மாநாட்டை நடத்த திமுக இளைஞரணி தயார்நிலையில் இருந்தது.

இந்த சூழலில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனால் இதற்கான மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் அரசு இயந்திரமும், திமுக அணிகளும் ஈடுபட்டிருக்கின்றன. இதன் காரணமாக, டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநாடு தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.