கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக கூறினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு காட்டியதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கி அந்த கட்சியின் பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றிய பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களை அணுகியும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதனால் சிங்கப்பூரிலிருந்து சிகிச்சையை முடித்துவிட்டு சென்னை வந்த அவர் கரை வேட்டியை கட்டாமல் சாதாரண வேட்டியை கட்டியிருந்தார். அது போல் அவர் அதிமுக கொடி இல்லாத காரையே பயன்படுத்தி வருகிறார். அது போல் சட்டமன்றத்திற்கும் காவி வேட்டியை அணிந்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் தனது ஆதரவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ஓபிஎஸ், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். கூட்டணி குறித்தும் அறிவிப்போம். அதிமுக வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்றார். இந்த நிலையில் அவர் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்ற தற்காலிக குழு ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஜனவரி 6ஆம் தேதி கோவையில் ஓபிஎஸ் நடத்தும் மாநாடுகள் குறித்தும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியிருப்பதாவது:-
ஏற்கெனவே ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பொது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு ஒரு பலமும் இல்லை. இருந்த 4, 5 பேரும் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். எனவே ஓபிஎஸ் தன்னுடன் இருக்கும் மற்ற 4, 5 பேரை திருப்திப்படுத்த எப்படியெல்லாம் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலை ஓபிஎஸ்க்கு இருக்கு. அவர் என்ன சொன்னாலும் அதிமுக தொண்டர்கள் இனி ஓபிஎஸ் சொல்வதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் கோவிலாக வணங்கக் கூடிய எம்ஜிஆர் மாளிகையை எட்டி உதைத்து, குண்டர்களை வைத்து ஆவணங்களை கொள்ளையடிக்க வைத்தார். கட்சி ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக எந்த அளவுக்கு பிரச்சினைகள் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு அவர் செய்துவிட்டார். வேதாளம் முருங்கைமரத்தில் ஏறுவது போல் அவ்வப்போது ஏறிவிடுவார். அதனால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அவரை பற்றி நாங்கள் பேசுவதில்லை, அவரை நாங்கள் பொருட்டாவும் மதிப்பதில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது, இப்பவும் இல்லை, எப்பவும் இல்லை. சிறுபான்மையின மக்களின் நாக்கில் தேனை தடவி திமுக ஏமாற்றிவிட்து. அதை அந்த மக்கள் உணர்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வுரிமை, பாதுகாப்பு, எல்லா விதமான சலுகைகளும் கொடுத்த ஒரே இயக்கம் அதிமுக. எனவே சிறுபான்மையினர் மக்கள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எங்களுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.