பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக்கோரி புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் குறித்து கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், ‘நிர்மாலாதேவி கடந்த 2018-ம் ஆண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று பதில் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அந்த குற்றப்பத்திரிகையின் நகலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கும், நிர்மலாதேவிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கும் உத்தரவி்ட்டு விசாரணையை பிப்ரவரி 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.