முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ஜெயக்குமார், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தேன். உச்ச நீதிமன்ற உத்தரவால் 11.11.2022-ல் விடுதலையானேன். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட என்னை திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் 12.11.2022 முதல் காவலில் வைத்துள்ளனர். இந்த முகாம் சிறை வாசத்தை விட மோசமாக உள்ளது. எங்களை முகாம் அறையிலிருந்து வெளியே வரவும், பிற கைதிகளுடன் பழகவும் அனுமதிப்பதில்லை. இதே நிலை தொடர்ந்தால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டணைக்கு சமமானது. நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. என் குடும்பத்தினர் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, குடும்பத்தினருடன் வசிக்க வேண்டும் என்ற ஜெயக்குமாரின் கோரிக்கை மீது தமிழக அரசின் முடிவு என்ன? சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் வீட்டில் அவரை காவலில் வைக்கலாமே? முகாம் காவலை திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்ற முடியாதா? சென்னையில் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குள் அவரை நடமாட அனுமதிக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஜெயக்குமாரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் தங்க வைக்க அனுமதிக்க முடியாது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வந்ததால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு முகாமை வேறு இடத்திற்கு மாற்ற இயலாது. இலங்கையில் இருந்து வந்தவர் என்பதால் மத்திய அரசும் தான் முடிவெடுக்க வேண்டும். எனவே ஜெயக்குமாரை குடும்பத்தினருடன் தங்க அனுமதி அளிக்க இயலாது என்றார். இதையடுத்து மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.