தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது-

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களை தொடர்ந்து அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொண்டன. எனவே, இந்த மாவட்டங்களில் எல்லாம் அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. மத்திய அரசின் உடனடி தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்.டி.ஆர்.எப். பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.

இதற்கிடையே மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். கள நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.