தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!

கட்டமைப்புகளை சீரமைத்து தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என மழை – வெள்ள பாதிப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது என்பதற்காக ரூ.5 கோடியில் மத்திய அரசு திட்டத்தை புதுச்சேரிக்கு தந்துள்ளது. கழிவு நீர் அகற்றலில் இயந்திரங்கள் பயன்பாடு தொடங்குவது பாதுகாப்பானதாக அமையும். மழை மிக அதிகமாக பெய்தததால் பாதிப்பு வருத்தமாக உள்ளது. இந்த அளவுக்கு மழை வரும் என்று சொல்லவில்லை என்று தமிழக அரசு கூறுகிறார்கள். அரசாங்கம் என்று இருக்கும்போது எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். கட்டமைப்புகளை இன்னும் சரி செய்து இருக்க வேண்டும். சென்னையில் மத்திய அதிகாரிகள் பாராட்டி விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில், மக்கள்தான் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்ட வேண்டும். உண்மை அறிந்து செயல்பட வேண்டும்.

புதுச்சேரியில் நானும் முதல்வரும் இணக்கமாக உள்ளோம். நான் சூப்பர் முதல்வர் அல்ல. நானும் முதல்வரும் – சகோதரன், சகோதரிதான். புதுவையில் அதிகாரிகள் செயல்பாடு தொடர்பாக முதல்வரின் ஆதங்கத்தை தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளேன். தன்னிச்சையாக நான் எவ்வித முடிவும் எடுப்பதில்லை. சில சுணக்கம் இருக்கலாம். அதிகாரிகளை அழைத்து அனைவரும் பங்கேற்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.