தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பெருமாள்புரத்தில் உணவு பொட்டலங்கள் வழங்கினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள குடியிருப்புகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வந்து நேரில் பார்க்கவில்லை. மீட்பு பணிகளையும் கவனிக்கவில்லை. மக்களை சந்திக்க வராமல், கூட்டணி குறித்து பேசுவதற்காக அவர் டெல்லிக்கு சென்று உள்ளார். தி.மு.க. அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை மட்டுமே செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. முதல்-அமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?. இவ்வாறு அவர் கூறினார்.