திமுக முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் கோவை வீடு, அலுவலகத்தில் இன்று கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. முன்னாள் எம்எல்ஏவான இவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட திமுக செயலாளராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது பொங்கலூர் பழனிச்சாமி திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். இவரது மகன் பெயர் பைந்தமிழ் பாரி. கோவை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர் தற்போது திமுகவின் விளையாட்டு அணியில் பொறுப்பு வகித்த வருகிறார். அதாவது பைந்தமிழ் பாரி திமுகவின் விளையாட்டு அணியில் மாநில துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியலில் ஒருபுறம் இப்படி செயல்பட்டு வரும் பைந்தமிழ் பாரி பல தொழில்களும் செய்து வருகிறார். குறிப்பாக கர்நாடகாவில் குவாரிகளும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் கர்நாடகா குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாகா கர்நாடகாவில் முறைகேடுகள், ஊழல் குறித்து விசாரித்து வரும் கர்நாடகா லோக்ஆயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து இன்று கர்நாடகா லோக்ஆயுக்தாக போலீசார் அதிரடியாக கோவைக்கு வந்து பைந்தமிழ் பாரியின் வீடு, அலுவலகத்தில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் உள்ள பைந்தமிழ் பாரியின் வீடு மற்றும் அதன் அருகே உள்ள அலுவலகங்களில் கர்நாடகாவை சேர்ந்த 15 லோக்ஆயுக்தா போலீசார் 2 கார்களில் வந்து சோதனை நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை மதியம் 1.30 மணி வரை நான்கரை மணிநேரம் நடந்தது. அப்போது வீடு, அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து ஆய்வு செய்தனர். சோதனை முடிவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ரெய்டு தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறிவிட்டு சென்றனர். இந்த ரெய்டு சம்பவத்தால் கிருஷ்ணா காலனி பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.