“இந்தியா” கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்த நிலையில் நிதிஷ் குமார் இந்தியில் பேசினார். இதனை மொழிபெயர்க்க கோரியபோது முதல்வர் முக ஸ்டாலின், திமுக எம்பி ஆகியோரை இந்தி கற்க கூறி அவர் சீறியுள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமாருக்கு எதிராக இஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சோனியா காந்தி, நிதிஷ் குமார், முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தலைவர்கள் உரையாடினர். அப்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்தியில் உரையாற்றினார். அப்போது டிஆர் பாலு தனக்கு எதிராக அமர்ந்திருந்த நிதிஷ்குமாரின் கட்சியை சேர்ந்த மனோஜ் ஷாவிடம் சைகை காட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
இதையடுத்து மனோஜ் ஷா, நிதிஷ் குமாரிடம் கூறியபோது அவர் கடும் கோபம் அடைந்தார். ‛‛நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம். இந்தி இந்தியாவின் தேசிய மொழி. திமுக தலைவர்கள் இந்தி மொழி கற்க வேண்டும்’’ எனக்கூறியுள்ளார். இதை எதிர்பார்க்க ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது அங்கு பரபரப்பை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்நிலையில் தான் நிதிஷ் குமாரின் இந்த பேச்சுக்கு இஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மதிப்பிற்குரிய நிதிஷ் குமார், இந்துஸ்தான் என்றால் இமயமலைக்கும், இந்து சாகரத்துக்கும் நடுவில் உள்ள நிலமா அல்லது இந்தி பேசாத இந்துக்கள் வாழும் இடமா. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மக்கள்தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்துக்காக இது மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மொழி, இலக்கியம், கலாசாரத்தை பின்பற்றும் மாநிலங்கள் இருப்பதால் இதுபோன்ற வாதங்களை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.