அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை: ஆளுநர் தமிழிசை

அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து “இந்தியா” என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கூட்டணி சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்த நிலையில், அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் பேசி இருக்கிறார். அப்போது திமுக தரப்பில் உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு எம்பி டி.ஆர்.பாலு கேட்டுள்ளார். இருப்பினும் இதில் கோபமடைந்த நிதிஷ் குமார், “இந்தி தேசிய மொழி அனைவரும் கற்க வேண்டும்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. இந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரம் இணையத்திலும் பேசுபொருள் ஆனது. இந்தி தேசிய மொழி என்று எப்படிச் சொல்லலாம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் புதிதாக கற்றுக் கொள்வதில் தவறில்லை. இது நமக்கு உதவியாகவே இருக்கும். நாம் வட இந்தியாவில் தமிழை வளர்க்க வேண்டுமானால் நாம் முதலில் இந்தி கற்க வேண்டும். கம்பர் எப்படி வால்மீகியின் ‘ராமாயணத்தை’ படித்து, ‘கம்பராமாயணம்’ தமிழில் எழுதினாரோ.. அதேபோல நாம் பிற மொழிகளைக் கற்றுத் தமிழை வளர்க்க வேண்டும். திமுக அரசியல் நோக்கத்திற்காக மொழியைப் பயன்படுத்தியது, இப்போது இந்தியை நிராகரிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற பாடத்தை கற்றுள்ளனர்.

இந்தி கற்க வேண்டும் என நிதிஷ் குமாரின் ஏன் அட்வைஸ் செய்தார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது உணர்வார் என்று நம்புகிறேன். இந்தி கற்றுக்கொள்வது சிறப்பான ஒன்று. அதை ஸ்டாலின் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால் இப்போது அவரது கூட்டணி தலைவரே இதைச் சுட்டுக்காட்டியுள்ளார். ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. அந்த அந்நிய மொழியை கற்பதற்குப் பதிலாக நாம் நமது நாட்டில் இருக்கும் ஒரு மொழியையே கற்றுக் கொள்ளலாமா.. இந்தி கற்காமல் இருந்ததால் தான் நம்மால் வலுவான ஒரு தலைவரை தேசியளவில் அனுப்ப முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்