தென்மாவட்ட வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் இதுவரை தாங்கள் பார்த்திடாத வரலாறு காணாத பெருமழையை சந்தித்தனர். பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சொந்த வீட்டில் மழை நீர் சூழ்ந்ததால் வெளியே செல்லவும் முடியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர். உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். அமைச்சர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ரேசன் கார்டு அடிப்படையில் 6,000 ரூபாயும், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மக்களுக்கு தலா 1000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்தார். எனினும் இந்த நிவாரணத் தொகை போதாது என்றும், நிவாரணத்தை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கன மழையால் வீடுகள் மற்றும் உடமைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். 3 நாட்களுக்கு மேலாக வீடுகளுக்குள் தேங்கியிருக்கும் வெள்ள நீர் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. சென்னையை ஒப்பிடும் போது மும்மடங்கு பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்னையை போலவே வெள்ள நிவாரண நிதி வழங்குவது ஏற்புடையதல்ல.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கன மழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.