இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது: திருமாவளவன்!

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது என தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் குற்றவாளி என்றும் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பொன்முடி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார்.

தமிழக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாக இருந்த வரும் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இது தொடர்பாக கூறியதாவது:-

அவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர். இந்த தீர்ப்பிலே நேர்மையாக நடந்து இருப்பது போல தெரியவில்லை. அவரே தனிப்பட்ட தன் விருப்ப அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்ததும் அவரே இந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்ததும் தற்போது வெளிப்படையாக தெரியவந்து இருக்கிறது. இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.