மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பெருமழை பெய்தது. அதேபோல கடந்த வாரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அதேபோல் விவசாய பயிர்களும் கடுமையாக சேதம் அடைந்தன. வெள்ளம் அடித்து சென்றதால் பல சாலைகளும் சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னமும் கூட முழுமையாக இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்த பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
மாநிலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை தேசிய பேரிடர் என அறிவிக்கப்படுவது இல்லை. தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பை வெளியிடும் நடைமுறையே மத்திய அரசிடம் இல்லை. இதற்கு முன்பும் எந்த மாநிலத்துக்கும் அதை அறிவிக்கவில்லை. அதேநேரம் ஒரு நிகழ்வை மாநில அளவில் பேரிடராக அறிவிக்க மாநில அரசு விரும்பினால் அதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதன்படி அறிவித்துவிட்டு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 சதவீதம் எடுத்து செலவழிக்கலாம். எனவே எந்த நிகழ்வையும் தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்காது. யாருக்கு அந்த பணம் போய் சேர்ந்திருக்கிறது என்று பார்க்கமுடியும். நீங்க கொடுக்கிற பணம் நிஜமாகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் போயிருக்கிறது என்று நினைக்கிறேன் கேள்வி கேட்க முடியாது. அது அரசு பணம் தானே என் அப்பன் சொத்தில்லையே… உங்க அப்பன் சொத்தில்லையே.. வங்கி கணக்கில் நேரடியாக போடுங்கள் என்றார். 6000 போதுமா வேண்டாமா என்று நான் கேட்கவில்லை. கொடுக்கும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்றார் நிர்மலா சீதாராமன்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளர். இது தொடர்பாக மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா.. மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம். மண்டியிட்டு கேட்கிறோம் என்று நினைக்கிறாரா..? கட்டிய வரி பணத்திற்கு வட்டி அளவிற்கு கூட திரும்ப தராமல் பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது இந்த ஆணவப் பேச்சு புதிதல்ல தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.