நாட்டின் 75வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார்.
பிரான்ஸ் நாட்டுடன் கடந்த காலங்களில் இந்தியா நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் ராணுவ தளவாடங்கள் விற்பனை இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்திய விமானப்படையின் பலமாக கருதப்படும் ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிடமிருந்துதான் வாங்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் பேஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் பலப்படுத்தியது. அதேபோல சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்க இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்டமுறையில் கலந்துரையாடினார். இப்படி இருக்கையில்தான் தற்போது ஜனவரியில் நடைபெறும்75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மேக்ரான் அழைக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவரால் வர முடியாத நிலை இருந்ததால், மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அதற்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளில் குடியரசு தின விழாக்களில் வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 2020ம் ஆண்டு அப்போதைய பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். குடியரசு தின விழாவில் மேக்ரான் பங்கேற்பதன் மூலம் பிரான்ஸ்-இந்தியா உறவு மேலும் வலுவடையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது, டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரான்ஸ் தலைவர்கள் கலந்து கொள்வது இது 6-வது முறையாகும்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சோஷியல் மீடியா தளத்தில், “எனது அன்பு நண்பர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், 75வது குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக உங்களை வரவேற்பதில் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களில் பகிரப்பட்ட நம்பிக்கையையும் கொண்டாடுவோம்” என பதிவிட்டுள்ளார். இதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நன்றி தெரிவித்துள்ளார்.