தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு பார்க்கிறது. நிதி ஒதுக்கீட்டில் எப்போதுமே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது எனப் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வெள்ள நிவாரணத் தொகை வழங்காத மத்திய அரசு பற்றி அமைச்சர் உதயநிதி அண்மையில் பேசிய கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவர்கள் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு இதுபோன்ற பேச்சுகள் நல்லதல்ல” என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். யாரிடம் எப்படி பேச வேண்டும் என பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நிதி கேட்டார். அதற்கு மத்திய அமைச்சர், மாநில அரசுகள் நிதி கேட்டதும் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா என்று கேட்டார். அதற்கு நான், அவர்கள் அப்பன் வீட்டு காசை நாங்கள் கேட்கவில்லை. தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என்று சொன்னேன். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு பார்க்கிறது. நிதி ஒதுக்கீடு என்று வரும்போது எப்போதுமே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. பேரிடர் வரும்போதெல்லாம் தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டது. 2015 முதல் 2021 வரை அப்படி கேட்கப்பட்ட தொகை 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி. ஆனால், இத்தனை ஆண்டுகளில் மத்திய அரசு கொடுத்ததோ வெறும் 5,300 கோடி. கேட்டதில் 4.6 சதவீதம் தான் கொடுத்துள்ளது.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்காக பேரிடர் பாதிப்பு நிதியில் ரூ.27,700 கோடி இழப்பீடு கேட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவர்கள் கொடுத்ததாக சொல்லும் ரூ.450 கோடி ரூபாய், சென்ற வருடத்திற்கு மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய தொகை தான். தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புயல் அடித்த அடுத்த நாளே அங்கு சென்று பார்வையிட்டு 1000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு எந்த மத்திய அமைச்சராவது அல்லது பாஜக தேசிய தலைவர்களாவது வந்தனரா? மாறுபட்ட ஆட்சி நடப்பதால் தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசுக்கு மனமில்லை. மத்திய அரசுக்கு நாம் 1 ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் திருப்பி கொடுப்பது வெறும் 29 பைசா. நவம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டியாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு முழுக்கவே சேர்த்து தமிழ்நாட்டுக்கு 900 கோடி தான் பேரிடர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனக்கு மரியாதை குறித்து பாடம் எடுத்திருக்கிறார். மழைநீர் வடிகால் அமைக்க மத்திய அரசு நிதி தரவில்லை. மாநில அரசின் நிதியில் தான் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. மாநில அரசை குற்றம்சாட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார். இதையெல்லாம் தமிழ்நாட்டு மகக்ள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்தில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்.
கடந்த முறை நான் ஒரு கிறிஸ்தவன் என பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. நான் படித்தது எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில். கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். அதோடு இந்த முறை நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. என்னை நீங்கள் கிறிஸ்தவன் என்று நினைத்தால் கிறிஸ்தவன். முஸ்லீம் என அழைத்தால் முஸ்லீம். இந்து என அழைத்தால் இந்து. எனக்கென்று சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன். எங்கள் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நான் எங்கும், எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பேசுவேன். நான் சொல்வதில் நீங்களும் உடன்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எம்மதமும் எங்களுக்கு சம்மதம். இவ்வாறு அவர் கூறினார்.