அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்!

கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறை முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக சீன நிறுவனத்தைச் சேர்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவழைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அண்மையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று விசாரணைக்காக, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “அமலாக்கத்துறை விசாரணையில் இது எனக்கு 20வது நாள். அதிகாரிகள் ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். நானும் பதில் சொல்கிறேன்.இது கிடப்பில் கிடக்கும் ஒரு வழக்கு. சிபிஐ இந்த வழக்கை முடித்து விட்டது. ஆனால், அமலாக்கத்துறை மீண்டும் ஓப்பன் செய்து, என்னிடம் எதையாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிறது. எனது வழக்கறிஞர்கள் ஏற்கனவே 100 பக்கத்திற்கு விரிவான பதில்களை அளித்துள்ளனர். என் மீது மூன்று வகையான வழக்குகள் உள்ளன. முதல் வகை போலி வழக்குகள், இரண்டாவது, மிகவும் போலியான வழக்குகள், மூன்றாவது மிக மிக போலியான வழக்குகள். இதில் இந்த கேஸ், மிக மிக போலியான வகையைச் சேர்ந்தது. இது கிறிஸ்துமஸ் நேரம். அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை ரொம்ப மிஸ் செய்வதால் திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள். நான் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக வந்தேன்” என கிண்டலாக கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.