பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது: வைகோ

“பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரியாரின் 50 வது நினைவு தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமூக நீதியின் வடிவமாக பெரியார் திகழ்கிறார். பெரியாரால் உலகெங்கும் சமூக நீதி தழைத்துள்ளது. அவரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற தொடங்கிவிட்டனர். சமீப காலமாக பெரியார் சிலை அவமதிப்பு அதிகரிப்பது என்பது திட்டமிட்டே ஒரு கூட்டம் செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுக்கிறோம். வெளிப்படையாகவே பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறிவிட்டு யாராவது ஒருவர் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவரது கை இருக்காது என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

மத்திய அமைச்சர்கள் யாரும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்க்கவில்லை என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்க்க வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.