உதயநிதி பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது: நாராயணன் திருப்பதி!

ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று சொல்வது சந்தர்ப்பவாதம் என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை என ஒவ்வொரு ஆண்டும் பாஜகவினர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். ரம்ஜான். பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்துக்களை மட்டும் வெறுப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் படித்தது கிறிஸ்தவ பள்ளியில். கல்லூரியும் கிறிஸ்தவ கல்லூரி. எனது மனைவியும் கிறிஸ்தவர். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை.” எனக் கூறினார். உதயநிதி ஸ்டாலின் இந்தப் பேச்சு அப்போது பெரும் புயலையே கிளப்பியது. அமைச்சராக இருப்பவர், தான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என பெருமையாக கூறுவதா என பாஜகவினர் கொதித்தனர். திமுக அரசின் இந்து விரோத போக்கை உதயநிதி ஸ்டாலின் அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். மேலும், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி அண்மையில் பேசியதும் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில், நேற்று பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த முறை நான் ஒரு கிறிஸ்தவன் என பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. நான் படித்தது எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில். கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். அதோடு இந்த முறை நான் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. என்னை நீங்கள் கிறிஸ்தவன் என்று அழைத்தால் கிறிஸ்தவன். முஸ்லீம் என அழைத்தால் முஸ்லீம். இந்து என அழைத்தால் நான் இந்து. எனக்கென்று சாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பேன். எங்கள் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நான் எங்கும், எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் பேசுவேன். நான் சொல்வதில் நீங்களும் உடன்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எம்மதமும் எங்களுக்கு சம்மதம்.” எனப் பேசினார்.

இந்நிலையில், உதயநிதியின் பேச்சு குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வருடம் இதே நாளில் “நான் கிருஸ்துவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் இப்போது “எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது” என்று சொல்லியிருப்பது திமுகவின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தான் நாத்திகவாதி என்ற முத்திரையோடு அரசியல் செய்ய விரும்பிய உதயநிதி, தனக்கெதிராக எழுந்த எதிர்வினையை கண்டு, ஹிந்து விரோத திமுக என்ற முத்திரை தன் கட்சிக்கு விழுந்து விட்டது கண்டு தற்போது பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது. தைரியமிருந்தால் சனாதன தர்மத்திற்கு (ஹிந்து மதத்திற்கு) எதிரான தனது கொள்கையில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக நிற்க வேண்டியது தானே? ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று சொல்வது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல முதிர்ச்சியற்ற அரசியல்” என விமர்சித்துள்ளார்.