அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு: பிரேமலதா

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எனக்கு அவர்கள் சொன்னது ஒன்றும் தவறாக தெரியவில்லை. உதயநிதி சொன்னதற்கு அவர்கள் பதில் கொடுத்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன், விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு உள்ளது. ஒரு வார்த்தையை நாம் பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். ஒரு வார்த்தை நம் வாயை விட்டு வந்துவிட்டால் அந்த வார்த்தை நமக்கு எஜமானன் ஆகிவிடும். உங்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை வரி பணத்தைத்தான் கேட்கிறோம் என உதயநிதி பேசியதுதான் சர்ச்சை. அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் கலைஞருக்கு பேனா வைக்க போகிறார்கள், கலைஞர் பெயரில் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. அவையும் மக்கள் வரிப்பணம்தானே! நீங்கள் பொறுப்பில்லாமல் பேசுவதை தவிர்த்துவிட்டால் உதயநிதிக்கு நல்லது என சொல்லிக் கொள்கிறேன்.

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை மக்களுடன் இருநாட்கள் நான் இருந்திருக்கேன். இவர்களுக்கு எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம். பிரட், பிஸ்கட், போர்வை உள்ளிட்டவைகளை வழங்கினோம். தூத்துக்குடியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பொருத்தவரையில் இது கருப்பு கிறிஸ்துமஸ் விழாதான். அங்கு மிக மோசமான நிலை உள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் முடிந்துவிட்டதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு. வெள்ளம் வந்து இத்தனை நாட்களாகியும் ஸ்ரீவைகுண்டம் என்ற தொகுதி தனித்தீவாக ஆக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் ரூ 6000 அறிவித்துள்ளார். அதை உறுதியாக நான் சொல்கிறேன், எந்த விஷயத்திற்கும் பத்தாது. குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சமாவது நிவாரண தொகை அறிவிக்க வேண்டும். விவசாய நிலத்தில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு அவர்கள் இழந்த தொகையை திருப்பி தர வேண்டும்.

களத்தில் ஆளும்கட்சியினரை நாம் பார்க்கவே இல்லை. எல்லாருமே கடுங்கோபத்தில் உள்ளார்கள். வாக்கு வாங்குவதற்காகவும் தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களை சந்திப்பது மட்டுமே ஆளுங்கட்சியின் வேலை இல்லை. கஷ்டமான நேரத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் செய்ய வேண்டும். நிறைய கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.