நாட்டின் முன்னாள் பிரதமரும் பாஜக முன்னாள் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்னவ், அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளில் நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் சார்பாக எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தேசத்தை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டார். இந்திய தாய்க்கு அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அமிர்த காலத்திலும் கூட உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசம் மற்றும் மக்கள் சேவைக்கான வாஜ்பாயின் அர்ப்பணிப்பு குறித்து வீடியோ ஒன்றை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.