சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை நடந்து வரும் நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாளை மண்டல பூஜையில் தங்க அங்கி சாத்தப்பட உள்ளது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தினசரி பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து வருகிறது. நேற்று வரை சபரிமலையில் 26.60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 18ஆம் படி ஏறும் வேகம் குறைந்ததால் இந்த வருடம் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக வெகு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அய்யப்பனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல இடங்களில் பக்தர்களின் வாகனங்களை போலீசார் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைத்ததனர். அவர்களுக்கு பல மணி நேரமாக உணவு, குடிநீர் உள்பட எந்த வசதியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை வந்த பக்தர்களை நேற்று காலை வரை சன்னிதானம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், பக்தர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் குறித்து கேரளா மற்றும் தமிழக அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.