பேரிடரே இல்லைன்னு சொன்னாங்க.. இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார்கள்: உதயநிதி

மத்திய நிதி அமைச்சர் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பாதிப்புகளை பார்ப்பதற்காக வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தாலும், ஏரி, குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளினாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல் ஆடு மாடு கோழி உள்ளிட்ட உயிரினங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. இதேபோல் திருநெல்வேலியில் மட்டும் மழை வெள்ளத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல், கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். அதன்படி நெல்லை மாவட்டத்தில் முதல்கட்டமாக மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினார். இதேபோல் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை(இன்று) நெல்லை வருவது குறித்து பேசினார். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெல்லை மாவட்டத்திற்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பேரிடரை பார்ப்பதற்காக.. என்ன பாதிப்புகள் இருக்கிறது என்று பார்பதற்காக வராங்க.. கண்டிப்பாக நிதி கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இதேபோல் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் மோடியிடம் பாதிப்புகள் நிறைய ஏற்பட்டிருக்கிறது அதற்கு தகுந்த நிதியினை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். நிதி அமைச்சர் பார்வையிட்ட பிறகு நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.