அமோனியா வாயு பாதிப்பு: நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

எண்ணூரில் அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

நேற்றிரவு எண்ணூர் பகுதியில் உள்ள ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணூர் பெரியகுப்பத்தில் ‘கோரமண்டல்’ எனும் உர தயாரிப்பு ஆலை இருக்கிறது. இந்த ஆலைக்கு தேவையான அமோனியா கப்பலிலிருந்து, பைப் வழியாக ஆலைக்கு கொண்டுவரப்பட்டும். நேற்று நள்ளிரவில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டபோது பைப்பில் உடைப்பு ஏற்பட்டு அமோனி காற்றில் கலந்திருக்கிறது. இதன்காரணமாக எண்ணூரின் பெரிய குப்பம், சின்ன குப்பம் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கண் எரிச்சல், மூசு்சு திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஏராளமான மக்கள் இங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறி திருவொற்றியூர், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், “கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குறைவான அளவு அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து தற்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 42 பேரும் இன்று வீடு திரும்பி விடுவார்கள்” என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-

அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் உள்ளனர். நெஞ்செரிச்சல், கண் எரிச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் துறை மருத்துவர்கள் மூவர் கொண்ட மருத்துவக்குழு பெரிய குப்பம் பகுதியில் மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. அமோனியா வாயு தாக்கியதால் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் இன்றே வீடு திரும்புவார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்” என்று கூறியுள்ளார்.