எண்ணூர் வாயு கசிவு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அம்மோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயு கசிவு தகவலால் பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் பொதுமக்கள் வீடுகளுக்குச் சென்றனர். பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். அம்மோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உர ஆலையில் ஆய்வு நடத்த குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

கப்பல்களில் இருந்து திரவ அம்மோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை, விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது.