எண்ணூர் அருகே தொழிற்சாலை வாயுக்கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்!

எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏறப்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.

கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதாகவும், குழாயில் ஏற்பட்ட சேதம் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை வெள்ளத்தின் போது இந்த ஆலையிலிருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து வெளியேறியுள்ளது. இதனால் எண்ணூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனமும் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது மற்றொரு அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், “கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குறைவான அளவு அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், அமோனியா கசிவு சரி செய்யப்பட்டுவிட்டதை உறுதி செய்திருக்கிறார். கச்சா எண்ணெய் பாதிப்பை தொடர்ந்து தற்போது அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளதால், இன்னும் என்னென்ன எல்லாம் சந்திக்க இருக்கிறதோ என எண்ணூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.