ஒரே நாளில் 122 ஏவுகணைகள்: உக்ரைன் மீது வான் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது, 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. பொதுமக்கள் 31 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. குட்டி நாடுதானே.. அடித்து துவைத்து விடலாம் என எண்ணி இந்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தாலும், போரில் ரஷ்யாவுக்கு தண்ணி காட்டியது உக்ரைன். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவிகளையும் வழங்கியதால் ரஷ்யாவுக்கு கடும் பதிலடியை உக்ரைன் கொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் ரஷ்யா தடுமாறி வருகிறது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் மீது நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது. 18 மணி நேரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தொடர் தாக்குதலில் ரஷ்ய ராணுவம் 36 டிரோன்கள் மற்றும் 122 ஏவுகணைகளை அனுப்பியது. போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்தாக்குதல் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைன் மீது ரஷ்யா 96 ஏவுகணைகளை அனுப்பியதே இதற்கு முன்னர் பெரிய தாக்குதலாக இருந்தது. உக்ரைனின் பல பகுதிகள் இந்த தாக்குதலில் நிலைகுலைந்தன. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சுரங்கப்பாதை ரயில் நிலையம் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 பேர் பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.