பிரதமர் மோடியின் செல்ஃபி நிலையங்கள்: ராகுல் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு ஆள் உயரத்திலான அட்டைப்படங்கள், பல ரயில் நிலையங்களில் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த செல்ஃபி நிலையங்களைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘மக்களின் வரிப்பணங்களை மக்களுக்கு எளிதான ரயில் சேவையை உருவாக்குவதற்காக பயன்படுத்தாமல், எல்லா ரயில் நிலையங்களிலும் உங்கள் புகைப்படங்களை வைத்து செல்ஃபி ஸ்டேண்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ‘ஏழைகளுக்கான ரயில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளீர்கள், நடைமேடை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளீர்கள், முதியோர்களுக்கான கட்டணச் சலுகைகளை ரத்து செய்துள்ளீர்கள், தனியார் மயமாக்கலுக்கான வேலைகளை செய்துவருகிறீர்கள்’ என வரிசையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ‘மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், மலிவு விலையில் சிலிண்டர் மற்றும் எளிய ரயில் பயணமா, அல்லது உங்களின் அட்டைப்படத்துடன் செல்ஃபியா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி, சில செல்ஃபி நிலையங்கள் தற்காலிகமாகவும், சில நிரந்தரமாகவும் நிறுவப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒரு செல்ஃபி நிலையம் அமைக்க 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக்கூறப்படும் நிலையில் மொத்தம் 882 செல்ஃபி நிலையங்கள் நிறுவப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.