நீட் தேர்வை எதிர்த்து திமுக முன்னெடுத்த கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவப் படிப்புகளுக்காக மத்திய அரசு நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்து உயிரிழந்து வரும் நிலையில் அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 50 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகளை பெற வேண்டும் என்ற நோக்குடன் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக நடத்தி உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், “நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக மாநில அரசு போராட்டம் செய்ய முடியாது. தமிழ்நாடு அரசு கையெழுத்து இயக்கம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, இதை அரசின் கொள்கையாக கருத முடியாது. பள்ளிகளிலும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் கையெழுத்துபோட நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இப்படி செய்வதால் மாணவர்கள் மனதில் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படும். மாணவர்களின் கவனம் படிப்பில் இருந்து திசை திரும்பும். எனவே கையெழுத்து இயக்கத்தை பள்ளிகளில் நடத்த அனுமதிக்க கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனிதாரர் தரப்பு கருத்துக்களை ஏற்காத நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். “மக்கள் கையெழுத்து இயக்கத்தை ஏற்கும்போது அதனை எப்படி தடுக்க முடியும்? இந்த காலத்து மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு எல்லாமே தெரியும். நாம் எதையும் அவர்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே உச்சநீதிமன்றம் இதில் தலையிட விரும்பவில்லை.” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.