மஹுவா மொய்த்ரா வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மக்களவையில் ஆவேசமான கேள்விகளை எழுப்பி நாடு முழுவதும் நன்கு அறிமுகமான முகமாக மாறியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா. மத்திய பாஜக அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை மிக கடுமையாக அவர் விமர்சித்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் பல கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றன. இதனால் அனைத்து மொழி ஊடகங்களும் முன்னுரிமை அளித்து வெளியிடும் வகையில் மஹுவா மொய்த்ராவின் மக்களவை பேச்சுக்கள் அமைந்தன. குறிப்பாக அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்ட முறைகேடு புகார் பூதாகரமானதை தொடர்ந்து, அது பற்றி மக்களவையில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார் மஹுவா மொய்த்ரா.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தர்ஷன் ஹிராநந்தனி என்ற தொழிலதிபர் பணம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறினார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே கடிதம் எழுத்தினார். “திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு தொழிலதிபர் தர்ஷன் லஞ்சம் கொடுத்த ஆதாரம் உள்ளது. மக்களவையில் அவர் எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தை பற்றியே உள்ளன.” என வழக்கறிஞர் முன்வைத்த கருத்தை சுட்டிக்காட்டி நிஷிகாந்த் துபே கடிதத்தில் தெரிவித்து உள்ளார். இதே கடிதத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணையமைச்சர் ராஜீவ் சந்திர் சேகர் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அதே நேரம் பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் இந்த குற்றச்சாட்டுகளை ஹிராநந்தனி குழுமம் மறுத்தது.

இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த பாஜக எம்பி வினோத் குமார் சோன்கர் தலைமையில் மக்களவை நெறிமுறைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நிறைவு செய்து நவம்பர் 9 ஆம் தேதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அப்போது தன் தரப்பு கருத்தை மஹுவா மொய்த்ரா முன்வைக்க வந்தார். ஆனால், அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் மஹுவாவை பேச அனுமதிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்த நடவடிக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா வழக்கு தொடர்ந்தார். கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.