திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்: முதல்வர் இரங்கல்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்.

கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.3) அவர் காலமானார்.

கு.க.செல்வம், சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கிப் பழகியவர். ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து சலசலப்பை ஏற்படுத்தினார். பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தவர், திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மீண்டும் திமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்ட நிலையில், தற்போது உடல்நலக் குறைவால் மறைந்துள்ளார்.

கு.க.செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் திமுக தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது.

சென்னை மேற்குப் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கழகத்துக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட பிள்ளை மனம் கொண்ட கழக வீரர் அவர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, கருணாநிதியின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார். அதுநாள் முதலே என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றினார். நான் வெளியூர் செல்லும்போது பலசமயம் என்னுடன் அவரும் வருவார்.

அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். கு.க.செல்வத்தின் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கழகத்துக்கும் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.