3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி அப்பீல்!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ1.75 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த டிசம்பர் 21-ந் தேதி தண்டனை விவரங்களை அறிவித்தார். மக்கள் பிரநிதிதித்துவ சட்டத்தின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதனடிப்படையில் பொன்முடி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு பதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் இலாகா கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கான 3 ஆண்டு சிறை தண்டனையை 30 நாட்களுக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 30 நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 22-ந் தேதி பொன்முடியும் மனைவி விசாலாட்சியும் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் 3 ஆண்டுச சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.