கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரியும், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனிதனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து, அன்றைய தினம் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்தும், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக சண்முகம் தாக்கல் செய்த பிரதான மனு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.