போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியே வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. அண்ணா தொழிற்சங்க பேரவை தனியே வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இது குறித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேசி தீர்வு காணலாம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பஞ்சப்படியை வழங்கும் விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது. ஓய்வுபெற்றவர்களுக்கு ஏதேனும் தருகிறோம் என்று பேச்சுவார்த்தையின்போது கூறவில்லை. அதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.