முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முரசொலி அலுவலக நில விவகாரத்தில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றும், அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முரசொலி நிலம் தொடர்பாக வருவாய் துறையிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த நிலத்தை அதன் கலைப்பிற்கு பிறகு பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்றதாகவும், அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டார். அதன்படி இந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 2019ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை கிடப்பிலேயே வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுதவற்கான செயலாகவே தெரிவதாகவும்,, அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுல்கு ஆதரவாக தவறாக பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் எனவும் கேள்வி எழுப்பினார்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி நிலத்தின் உரிமை யாருக்குள்ளது என ஆணையம் முடிவெடுக்காது என்றும், ஆனால் சம்பந்தப்பட்ட நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புகார்தாரர் ஸ்ரீநிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி முரசொலி அறக்கட்டளை என்பது அந்த நிலத்தின் வாடகைதாரர் மட்டுமே என்பதால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் கேளுங்கள் என ஆணையத்திடம் சொல்ல முடியுமே தவிர, ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர முடியாது என தெரிவித்தார். எஸ்.சி. மட்டும்தான் புகார் அளிக்க வேண்டும் என அவசியம் இல்லை என்றும், ஆனாலும் இதே விவகாரம் தொடர்பாக பட்டியல் இனத்தை சேர்ந்த பி.பெரியசாமி என்பவரும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், ஆணையம் விசாரணைக்கு கேட்டால் ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.