பிரதமர் மோடியைத் தொடர்ந்து சோனியா, ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு திடீரென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்த உள்ளது. இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் என்பது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இன்று மாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து திடீரென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி அக்பர் சாலையில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி வரவேற்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேருடன் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முதலில் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். அதன்பிறகு கேலோ இந்தியா போட்டிக்கு வரும்படி உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதோடு தமிழகத்திலும் இந்தியாவிலும் திமுக-காங்கிரஸ் இடையேயான பந்தம் பலமாக உள்ளது. இந்நிலையில் தான் டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் இருகட்சிகளின் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் மேலோட்டமாக விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது தொடங்க உள்ளது. இத்தகைய சூழலில் இவர்களின் இந்த சந்திப்பு என்பது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர ராகுல் காந்தி விரைவில் மணிப்பூரில் இருந்து மும்பை வரை 14 மாநிலங்களில் பாதயாத்திரை 2.0 தொடங்க உள்ளார். இந்த யாத்திரை என்பது ஜனவரி 14ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பாரத் ஜோடோ நியாய யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் இந்தியாவின் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பங்கேற்க வைக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கூறியுள்ளதோடு, அதில் பங்கேற்க வரும்படி அழைப்பும் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.