வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையுடன் செயல்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி!

வருமான வரித் துறை அறம் சார்ந்து நேர்மையோடு செயல்பட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார்.

வருமான வரி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளையின் 14-வது மாநில பிரதிநிதிகள் மாநாடு தூத்துக்குடியில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று காலை தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவர் எம்.சந்தானம் கூட்டமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். மாநில தலைவர் ஆர்.ஆர்.சியாம் நாத் தலைமை வகித்தார். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

வருமான வரித் துறையின் செயல்பாடு அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். வரி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்ட பக்தர்களுக்கு வரியை ஏய்ப்பதற்கு கடவுளே உதவி செய்ததாக புராண கதைகள் இருக்கின்றன.
வரியை வசூலிப்பவர்கள் எப்போதும் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பவர்கள். அவர்களுக்கு அபய குரல் கொடுக்க வேண்டியது இல்லை. வரியை செலுத்துவோரிடம் தான் அபய குரல் இருக்கிறது. அபய குரல் இருக்கும் இடத்தில் தான் கடவுள் வருகிறார். கோரிக்கை எங்கே இருக்கிறதோ அங்கே தான் அருள் பாலிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே, இந்த இடத்தில் செயல்படுகின்ற நீங்கள் எவ்வளவு அறத்தோடு இருக்க வேண்டும், நேர்மையோடு இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் இருக்கிற செல்வத்தின் அசமத்துவத்தை சமத்துவமாக்க வேண்டிய அல்லது சமநீதியாக நிலை நிறுத்த வேண்டிய ஒரு துறை தான் வருமான வரித் துறை. இந்த துறை மற்ற எல்லா துறைகளையும் விட பொறுப்போடும், லட்சிணையோடும், அறத்தோடும் செயல்பட வேண்டிய துறை. இந்த துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளையும், ஊழியர்களையும் வாழ்த்துகிறேன். எந்த சூழ்நிலையிலும் அதிகாரத்தின் குரலுக்கு மடங்காமல் அறத்தின் குரலின் வடிவமாக நீங்கள் இருக்க வேண்டும்.

இதே வேளையில் இந்த துறையில் பணியாற்றுகின்ற அலுவலர்கள், ஊழியர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மாநில வாரி, மொழி அடிப்படையில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற உங்களது நீண்ட கால கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இது தொடர்பாக தொடர்ந்து மக்களவையில் குரல் கொடுப்பேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி கூறினார்.